Friday, 31 December 2010

அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : இரண்டாம் ஆண்டில் நமது பள்ளி வலைத்தளம் !


வணக்கம்.



விளையாட்டாக ஆரம்பித்து இன்று ஓராண்டு முடியும் தருவாயில் உள்ளது, நமது பள்ளி வலைத்தளம் ! இத்துடன் மொத்தம் 45 பதிவுகள் போடப்பட்டுள்ளன. இப்பதிவுகள் சிலருக்காவது பயன் தரும் வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

தளத்தின் பதிவுகள் சில பிரபல தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திகளில் இருந்து எடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டது, என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பள்ளி சார்ந்த பதிவுகள், நிழற்படங்கள் அனைத்தும் பள்ளி சார்பாக எடுக்கப்பட்டவையே ஆகும்.

நமது தளத்தில் பின்னூட்டங்கள் இட்ட நண்பர்கள், தமிழ் இண்ட்லியில் வாக்கு அளித்தவர்கள் மேலும் மின்னஞ்சல் மூலம் பாராட்டு தெரிவித்தவர்கள் என அனைவருக்கும் நன்றிகள்..


இனிப்பான செய்தி: நமது பள்ளி வலைத்தளத்தை, பிளாக்கரில் இருந்து மாற்றி தனி வலைத்தளமாக (டொமைன்) மாற்ற விழைகிறேன். விரைவில் எதிர்பாருங்கள்..! (தை பிறந்தால் வழி பிறக்கும்)


www.arimalamschool.com
www.arimalamghss.com
www.arimalampalli.com
www.ghssarimalam.com


நீங்கள் இதில் ஒரு முகவரியை தேர்வுசெய்து, பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.. அல்லது சைடு பாரில் ஓட்டு போடவும்.


வேண்டுகோள்:  இந்த தளத்தில் அரிமளம் பள்ளியின் ஆசிரியர்கள், இந்நாள் & முன்னாள் மாணவர்கள் மற்றும் விருப்பம் உள்ள நண்பர்கள் என அனைவரும் பங்களிக்கலாம். தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

- அன்புராஜா 

Friday, 24 December 2010

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள்

Courtesy: Google Images
பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை பிப்., 24 க்குள் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2ல் துவங்கி 22ல் முடிவடைகிறது.

கணிதம், அறிவியல், புவியியல் போன்ற பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்கி 24க்குள் அனைத்து செய்முறை தேர்வுகளையும் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிப்., 24ல் தேர்வுத்தாள்களை அனுப்பி வைக்கவும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று லட்சம் மாணவ, மாணவியர் செய்முறை தேர்வு எழுத உள்ளனர்.

Wednesday, 15 December 2010

மருத்துவக் கல்லூரியில் சேர மீண்டும் நுழைவுத்தேர்வு !


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியிருப்பதற்கு, தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை, தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்தது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எம்.பி. பி.எஸ்.,  பி.டி.எஸ்.,  எம்.டி., உள்ளிட்ட இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை கொண்டுவர, இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்தது. இம்முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தனியார் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

"மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்' என, பிரதமருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். ஆனால், மருத்துவம், முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவில் தலையிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் இரு தினங்களுக்கு முன் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம், அடுத்த ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால், தமிழக மாணவர்கள் பலருக்கு வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையும், தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு அமலில் இருந்தபோது, கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட்டு, தொழிற்படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது.

தற்போது தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக கிராமப்புற மாணவர்கள், இங்குள்ள நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி, டில்லி, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகர்ப்புற மாணவர்களுடனும் போட்டியிட வேண்டியிருக்கும். அப்போது, கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


"தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை தட்டிப் பறிக்கும் இந்த விஷயத்தில், முதல்வர் கருணாநிதி உடனே தலையிட்டு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து தடையாணை பெற வேண்டும். மேலும், பிரதமருடன் பேசி, பொது நுழைவுத் தேர்வை கைவிடச் செய்ய வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Saturday, 11 December 2010

தமிழ் வழி பி.எட்., சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு இல்லை !


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை தொலைக் கல்வி இயக்ககத்தின் கீழ், தமிழ்வழி பி.எட்., சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு இல்லை.

வரும் கல்வியாண்டு பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இரண்டாண்டு கற்பித்தல் அனுபவத்துடன் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பி.எட்., படிக்கலாம்.

தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவிஇயற்பியல், உயிர் இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், உயிர் வேதியியல், பயன்பாட்டு அறிவியல், விலங்கியல், தாவரவியல், தாவர உயிரியல், நுண்ணுயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், உயிர்நுட்பவியல், வரலாறு, இந்திய பண்பாடு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடு பிரிவுகளின் இளநிலை பட்டம் பெற்றவர்கள், பொருளாதாரம், வணிகவியல், மனையியல் பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது. 

விண்ணப்பம் பெற முகவரி : எண்10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை - 625 002 அல்லது 36, மேல வடம்போக்கி தெரு, மதுரை - 625 001.
 கூடுதல் விவரங்களுக்கு 0452 - 252 1695, 233 9974-ல் அணுகலாம்.

கால்நடை அறிவியலில் சான்றிதழ் பயிற்சிகள்!

www.tanuvas.ac.in
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 4 வகையான சான்றிதழ் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

கல்வித்தகுதி மற்றும் அது சம்பந்தமான பயிற்சிகளின் விவரம் பின்வருமாறு, 

10 ஆம் வகுப்பு - விலங்கு நலம் பேணுதல்(புத்தகம்/இணையதள முறை)
ஆங்கிலம் எழுத, படிக்க, பேச தெரிந்தவர்கள் - தீவனங்கள் தயாரிக்கும் பயிற்சி(குறுந்தகடு முறை)

பி.வி.எஸ்.சி. பட்டப்படிப்பு - நோய் ஆய்வில் நவீன உத்திகள், அசைபோடும் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள்(புத்தகம்/குறுந்தகடு முறை)

மாடுகளில் மலட்டுத்தன்மையை போக்குவதற்கான மேலாண்மை பயிற்சி போன்றவை.


ஒவ்வொரு பயிற்சியும் 6 மாதகாலம் நடைபெறுவதோடு, அனைத்தும் ஆங்கில வழியிலேயே இருக்கும். இவை சம்பந்தமான விண்ணப்பம் மற்றும் விவரங்களை www.tanuvas.ac.in என்ற இணையதளத்திலிருந்து பெறலாம். மேலும் அஞ்சல் வழியாகவும் விண்ணப்பங்களை பெறலாம்.

அனைத்தையும் பற்றிய விரிவான தகவல்களை பெற 044-25554375 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பங்கள் போய்சேர வேண்டிய கடைசி நாள் 31-01-2011.

தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம்!


தமிழ் வழியில் படித்தால், அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிப்பதற்கு வழிவகை செய்யும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 


கோவையில் கடந்த ஜூன் மாதம் நடந்த, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முதல்வர் கருணாநிதி பேசும்போது, ‘தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.


தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கத்தில், இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இது தொடர்பாக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அரசு வேலை வாய்ப்புகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசாணையை பிறப்பித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். அரசுத்துறைகள், மாநில சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகள், அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கார்ப்பரேஷன் மற்றும் நிறுவனங்களில் மொத்த காலிப் பணியிடங்களில், 20 சதவீதம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இனிமேல் அரசுத் துறைகளில் பணி நியமனங்கள் நடந்தால், மொத்த பணியிடங்களில் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும். இதனால், தமிழ் வழியில் படித்த பலருக்கும், அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பல்வேறு படிப்புகளை தமிழ் வழியில் தான் படிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு வேலை வாய்ப்பில், அதிக பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று, அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, 4 December 2010

பொதுத்தேர்வு அட்டவணை - 2011


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை, அரசு தேர்வுத்துறை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரையும் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்கள் நன்றாக தயாராகும் வகையில், முக்கியப் பாடத் தேர்வுகளுக்கு இடையே போதிய இடைவெளி அளித்து, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வை ஏழரை லட்சம் மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 11 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.கடந்த பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடந்தன. இந்த ஆண்டும், மார்ச் 1ல் தேர்வை துவக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், 1ம் தேதி செவ்வாய்க்கிழமையில் வருகிறது. தேர்வுகள் எந்தவித குளறுபடிகளும் இன்றி, அமைதியாக நடக்க வேண்டும் என்பதால், 2ம் தேதி புதன் கிழமை முதல் தேர்வை துவக்கலாம் என, தேர்வுத்துறைக்கு பல்வேறு அதிகாரிகள் ஆலோசனை அளித்தனர். அதன்படி, 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வெள்ளிக்கிழமையில் முடிகிறது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயாரிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக தாராள மனப்பான்மையுடன் தேர்வுத்துறை செயல்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியமானதாக இருக்கிறது. இதை தேர்வுத்துறை அதிகாரிகள் உணர்ந்து, முக்கியப் பாடங்களுக்கு இடையே போதிய கால அவகாசம் அளித்து வருகின்றனர்.

தேர்வுத்துறை தாராளம்: அதன்படி, மார்ச்சில் நடக்கும் தேர்வுக்கும் போதிய இடைவெளி அளித்துள்ளனர். ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, 8ம் தேதி நடக்கிறது. அதன்பின், 9, 10 ஆகிய இரு நாட்களுக்குப் பின், 11ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. அதையடுத்து, இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் 14ம் தேதி வேதியியல் தேர்வு நடக்கிறது. அதேபோல், கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுக்கு முன்னதாகவும் இரண்டு நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள், 17ம் தேதி தான் நடக்கின்றன.அதன்பின், மூன்று நாட்கள் அவகாசத்திற்குப் பிறகு 21ம் தேதி உயிரியல், தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன. இதன் மூலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட தேர்வுகளுக்கு, கடைசி நேர வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவர்கள் நல்ல முறையில் தயாராக முடியும்.கடந்த முறை இந்த தேர்வை ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் எழுதினர். இந்த ஆண்டு ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த சரியான புள்ளி விவரம், ஓரிரு நாளில் தெரிய வரும்.

பத்தாம் வகுப்பு: அதேபோல், பத்தாம் வகுப்பில் பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.,), மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிகிறது. பிளஸ் 2 தேர்வைப்போல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கும் இடையிடையே போதிய இடைவெளி தரப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகளும் மார்ச் 28ல் துவங்குகின்றன.மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், ஆறு நாட்கள் முன்னதாக மார்ச் 22ல் துவங்குகின்றன. எனினும், நான்கு போர்டு தேர்வுகளும் ஏப்ரல் 11ம் தேதி தான் முடிகின்றன. கடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 966 பேர் எழுதினர். நான்கு போர்டுகளும் சேர்த்து ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 71 பேர் எழுதினர். இந்த எண்ணிக்கை, இந்த ஆண்டு 11 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவே கடைசி: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வித் திட்டமாக இருந்து வருகிறது.  ஆனால், பத்தாம் வகுப்பு வரை, ஸ்டேட்போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வகையான கல்வித் திட்டங்கள் இதுவரை அமலில் இருந்து வருகின்றன.நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, 2012ல் ஒரே வகையான தேர்வு முறை அமலுக்கு வரும். நான்கு வகையான கல்வி திட்டத்தின் அடிப்படையில் நடக்கும் கடைசி பொதுத்தேர்வாக, வரும் தேர்வு அமைந்துள்ளது.

சலுகை நேரம் தெரியுமா? அனைத்து வகையான தேர்வுகளுக்கும், முதல் 15 நிமிடம் மாணவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் நுழைந்ததும், முதல் 10 நிமிடம் வினாத்தாள் படித்து பார்க்க சலுகை வழங்கப்படுகிறது. அடுத்த 5 நிமிடம், விடைத்தாளில் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் எழுதுவதற்காக வழங்கப்படுகிறது.பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை விடை அளிப்பதற்கான நேரம், 10.15க்கு துவங்கி, 1.15க்கு முடிவடையும். அதுவே, 10ம் வகுப்பாக இருந்தால் 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும்.

ஓ.எஸ்.எல்.சி., அட்டவணை, பெரும்பாலும் எஸ்.எஸ்.எல்.சி., அட்டவணைப்படியே நடக்கிறது. மொழி மற்றும் ஆங்கில தேர்வுகளை அடுத்து, ஏப்ரல் 2ம் தேதி முக்கிய மொழிப்பாட மூன்றாவது தாள் தேர்வு நடக்கிறது. அதன்பின், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை.அதேபோல், ஆங்கிலோ இந்தியன் தேர்வும், மெட்ரிக் தேர்வு அட்டவணைப்படியே பெரும்பாலான தேர்வுகள் நடக்கின்றன. ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு, மார்ச் 22ம் தேதி மொழித்தாள் தேர்வு நடக்கிறது. இவர்களுக்கு, மொழி இரண்டாம் தாள் தேர்வு கிடையாது.மற்றபடி ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் சிவிக்ஸ் ஆகிய அனைத்து தேர்வுகளும், மெட்ரிக் அட்டவணையே இவர்களுக்கு பொருந்தும். கடைசி நாளான ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு புவியியல் தேர்வு மட்டும் நடக்கிறது. 


பொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம்

பிளஸ் 2

தேர்வு தேதி தேர்வுப் பாடம்
2.3.11 மொழி முதல் தாள்
3.3.11 மொழி இரண்டாம் தாள்
7.3.11 ஆங்கிலம் முதல் தாள்
8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல்
14.3.11 வேதியியல், கணக்குப்பதிவியல்
17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி

எஸ்.எஸ்.எல்.சி.,

28.3.11 மொழி முதல் தாள்
29.3.11 மொழி இரண்டாம் தாள்
31.3.11 ஆங்கிலம் முதல் தாள்
1.4.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.11 கணிதம்
8.4.11 அறிவியல்
11.4.11 சமூக அறிவியல்

மெட்ரிகுலேஷன்

22.3.11 மொழி முதல் தாள்
23.3.11 மொழி இரண்டாம் தாள்
24.3.11 ஆங்கிலம் முதல் தாள்
25.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.3.11 கணிதம் முதல் தாள்
30.3.11 கணிதம் இரண்டாம் தாள்
1.4.11 அறிவியல் முதல் தாள்
5.4.11 அறிவியல் இரண்டாம் தாள்
8.4.11 வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11.4.11 புவியியல் மற்றும் பொருளியல்

-

-