Wednesday 15 December 2010

மருத்துவக் கல்லூரியில் சேர மீண்டும் நுழைவுத்தேர்வு !


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியிருப்பதற்கு, தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை, தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்தது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எம்.பி. பி.எஸ்.,  பி.டி.எஸ்.,  எம்.டி., உள்ளிட்ட இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை கொண்டுவர, இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்தது. இம்முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தனியார் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

"மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்' என, பிரதமருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். ஆனால், மருத்துவம், முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவில் தலையிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் இரு தினங்களுக்கு முன் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம், அடுத்த ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால், தமிழக மாணவர்கள் பலருக்கு வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையும், தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு அமலில் இருந்தபோது, கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட்டு, தொழிற்படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது.

தற்போது தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக கிராமப்புற மாணவர்கள், இங்குள்ள நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி, டில்லி, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகர்ப்புற மாணவர்களுடனும் போட்டியிட வேண்டியிருக்கும். அப்போது, கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


"தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை தட்டிப் பறிக்கும் இந்த விஷயத்தில், முதல்வர் கருணாநிதி உடனே தலையிட்டு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து தடையாணை பெற வேண்டும். மேலும், பிரதமருடன் பேசி, பொது நுழைவுத் தேர்வை கைவிடச் செய்ய வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments :

-

-