Saturday 4 December 2010

பொதுத்தேர்வு அட்டவணை - 2011


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை, அரசு தேர்வுத்துறை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரையும் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்கள் நன்றாக தயாராகும் வகையில், முக்கியப் பாடத் தேர்வுகளுக்கு இடையே போதிய இடைவெளி அளித்து, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வை ஏழரை லட்சம் மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 11 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.கடந்த பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடந்தன. இந்த ஆண்டும், மார்ச் 1ல் தேர்வை துவக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், 1ம் தேதி செவ்வாய்க்கிழமையில் வருகிறது. தேர்வுகள் எந்தவித குளறுபடிகளும் இன்றி, அமைதியாக நடக்க வேண்டும் என்பதால், 2ம் தேதி புதன் கிழமை முதல் தேர்வை துவக்கலாம் என, தேர்வுத்துறைக்கு பல்வேறு அதிகாரிகள் ஆலோசனை அளித்தனர். அதன்படி, 2ம் தேதி துவங்கி, 25ம் தேதி வெள்ளிக்கிழமையில் முடிகிறது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயாரிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக தாராள மனப்பான்மையுடன் தேர்வுத்துறை செயல்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியமானதாக இருக்கிறது. இதை தேர்வுத்துறை அதிகாரிகள் உணர்ந்து, முக்கியப் பாடங்களுக்கு இடையே போதிய கால அவகாசம் அளித்து வருகின்றனர்.

தேர்வுத்துறை தாராளம்: அதன்படி, மார்ச்சில் நடக்கும் தேர்வுக்கும் போதிய இடைவெளி அளித்துள்ளனர். ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, 8ம் தேதி நடக்கிறது. அதன்பின், 9, 10 ஆகிய இரு நாட்களுக்குப் பின், 11ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. அதையடுத்து, இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் 14ம் தேதி வேதியியல் தேர்வு நடக்கிறது. அதேபோல், கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுக்கு முன்னதாகவும் இரண்டு நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள், 17ம் தேதி தான் நடக்கின்றன.அதன்பின், மூன்று நாட்கள் அவகாசத்திற்குப் பிறகு 21ம் தேதி உயிரியல், தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன. இதன் மூலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட தேர்வுகளுக்கு, கடைசி நேர வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவர்கள் நல்ல முறையில் தயாராக முடியும்.கடந்த முறை இந்த தேர்வை ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் எழுதினர். இந்த ஆண்டு ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த சரியான புள்ளி விவரம், ஓரிரு நாளில் தெரிய வரும்.

பத்தாம் வகுப்பு: அதேபோல், பத்தாம் வகுப்பில் பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.,), மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிகிறது. பிளஸ் 2 தேர்வைப்போல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கும் இடையிடையே போதிய இடைவெளி தரப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகளும் மார்ச் 28ல் துவங்குகின்றன.மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், ஆறு நாட்கள் முன்னதாக மார்ச் 22ல் துவங்குகின்றன. எனினும், நான்கு போர்டு தேர்வுகளும் ஏப்ரல் 11ம் தேதி தான் முடிகின்றன. கடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 966 பேர் எழுதினர். நான்கு போர்டுகளும் சேர்த்து ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 71 பேர் எழுதினர். இந்த எண்ணிக்கை, இந்த ஆண்டு 11 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவே கடைசி: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வித் திட்டமாக இருந்து வருகிறது.  ஆனால், பத்தாம் வகுப்பு வரை, ஸ்டேட்போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வகையான கல்வித் திட்டங்கள் இதுவரை அமலில் இருந்து வருகின்றன.நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, 2012ல் ஒரே வகையான தேர்வு முறை அமலுக்கு வரும். நான்கு வகையான கல்வி திட்டத்தின் அடிப்படையில் நடக்கும் கடைசி பொதுத்தேர்வாக, வரும் தேர்வு அமைந்துள்ளது.

சலுகை நேரம் தெரியுமா? அனைத்து வகையான தேர்வுகளுக்கும், முதல் 15 நிமிடம் மாணவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் நுழைந்ததும், முதல் 10 நிமிடம் வினாத்தாள் படித்து பார்க்க சலுகை வழங்கப்படுகிறது. அடுத்த 5 நிமிடம், விடைத்தாளில் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் எழுதுவதற்காக வழங்கப்படுகிறது.பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை விடை அளிப்பதற்கான நேரம், 10.15க்கு துவங்கி, 1.15க்கு முடிவடையும். அதுவே, 10ம் வகுப்பாக இருந்தால் 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும்.

ஓ.எஸ்.எல்.சி., அட்டவணை, பெரும்பாலும் எஸ்.எஸ்.எல்.சி., அட்டவணைப்படியே நடக்கிறது. மொழி மற்றும் ஆங்கில தேர்வுகளை அடுத்து, ஏப்ரல் 2ம் தேதி முக்கிய மொழிப்பாட மூன்றாவது தாள் தேர்வு நடக்கிறது. அதன்பின், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை.அதேபோல், ஆங்கிலோ இந்தியன் தேர்வும், மெட்ரிக் தேர்வு அட்டவணைப்படியே பெரும்பாலான தேர்வுகள் நடக்கின்றன. ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு, மார்ச் 22ம் தேதி மொழித்தாள் தேர்வு நடக்கிறது. இவர்களுக்கு, மொழி இரண்டாம் தாள் தேர்வு கிடையாது.மற்றபடி ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் சிவிக்ஸ் ஆகிய அனைத்து தேர்வுகளும், மெட்ரிக் அட்டவணையே இவர்களுக்கு பொருந்தும். கடைசி நாளான ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு புவியியல் தேர்வு மட்டும் நடக்கிறது. 


பொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம்

பிளஸ் 2

தேர்வு தேதி தேர்வுப் பாடம்
2.3.11 மொழி முதல் தாள்
3.3.11 மொழி இரண்டாம் தாள்
7.3.11 ஆங்கிலம் முதல் தாள்
8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல்
14.3.11 வேதியியல், கணக்குப்பதிவியல்
17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி

எஸ்.எஸ்.எல்.சி.,

28.3.11 மொழி முதல் தாள்
29.3.11 மொழி இரண்டாம் தாள்
31.3.11 ஆங்கிலம் முதல் தாள்
1.4.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.11 கணிதம்
8.4.11 அறிவியல்
11.4.11 சமூக அறிவியல்

மெட்ரிகுலேஷன்

22.3.11 மொழி முதல் தாள்
23.3.11 மொழி இரண்டாம் தாள்
24.3.11 ஆங்கிலம் முதல் தாள்
25.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.3.11 கணிதம் முதல் தாள்
30.3.11 கணிதம் இரண்டாம் தாள்
1.4.11 அறிவியல் முதல் தாள்
5.4.11 அறிவியல் இரண்டாம் தாள்
8.4.11 வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11.4.11 புவியியல் மற்றும் பொருளியல்

No comments :

-

-