Saturday 11 December 2010

தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம்!


தமிழ் வழியில் படித்தால், அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிப்பதற்கு வழிவகை செய்யும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 


கோவையில் கடந்த ஜூன் மாதம் நடந்த, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முதல்வர் கருணாநிதி பேசும்போது, ‘தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.


தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கத்தில், இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இது தொடர்பாக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அரசு வேலை வாய்ப்புகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசாணையை பிறப்பித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். அரசுத்துறைகள், மாநில சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகள், அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கார்ப்பரேஷன் மற்றும் நிறுவனங்களில் மொத்த காலிப் பணியிடங்களில், 20 சதவீதம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இனிமேல் அரசுத் துறைகளில் பணி நியமனங்கள் நடந்தால், மொத்த பணியிடங்களில் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும். இதனால், தமிழ் வழியில் படித்த பலருக்கும், அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பல்வேறு படிப்புகளை தமிழ் வழியில் தான் படிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு வேலை வாய்ப்பில், அதிக பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று, அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments :

-

-