Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Friday, 18 October 2013

வள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு


வள்ளியப்பன் அய்யா நினைவுப் பரிசு



நம் அரிமளம் மண்ணின் மைந்தன், சென்னை ஐ.ஓ.பி வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர், காலஞ்சென்ற அய்யா  தெய்வத்திரு. வள்ளியப்பன் அவர்களின் நினைவாக இந்த கல்வி ஆண்டு முதல் நம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.


அமெரிக்காவில் வசிக்கும் வள்ளியப்பன் அய்யாவின் புதல்வர்களால் இப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 

வள்ளியப்பன் அய்யாவின் பிறந்த தினமான  6 ஜீன் 2014 அன்று பள்ளியில் வழங்கப்படும். 

பரிசுகள் அனைத்தும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள் அடிப்படையில் பரிசீலித்து வழங்கப்படும்.  பரிசுகள் 4 பிரிவுகளாக வழங்கப்படுகிறது.


சிறப்பாக பணியாற்றும் ஆசிரியருக்கு பரிசு..


1. சிறந்த கணித,அறிவியல் ஆசிரியர்                                                                  ரூ. 10,000

     குறிப்பிட்ட பாடத்தில் அதிகபட்ச சராசரி மதிப்பெண்

     (கணிதம் / இயற்பியல் / வேதியியல் / உயிரியல் / மின்னியல்)



சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு பரிசு..



2. சிறந்த மாணவன் - முதல் பரிசு                                                                          ரூ. 10,000

    (முதல் மருத்துவ/பொறியியல் கட் ஆப் மதிப்பெண்)


3. சிறந்த மாணவன் - இரண்டாம் பரிசு                                                                   ரூ. 6,000

    (இரண்டாம் மருத்துவ/பொறியியல் கட் ஆப் மதிப்பெண்)


4. சிறந்த மாணவன் - மூன்றாம் பரிசு                                                                     ரூ. 4,000

    (மூன்றாம் மருத்துவ/பொறியியல் கட் ஆப் மதிப்பெண்)


இப்பரிசுகள் வழங்கப்படுவதன் நோக்கம், தெய்வத்திரு வள்ளியப்பன் அய்யா அவர்களின் ஆசைப்படி நம் பள்ளியிலிருந்து எண்ணற்ற தகுதியும், திறமையும் மிக்க மருத்துவர்களும், பொறியாளர்களும் வருங்காலத்தில் உருவாக வேண்டும் என்பதே.! இதன் மூலம் நாட்டுக்கும், நம் பள்ளிக்கும் மாணவர்கள் பெருமை தேடி தரவேண்டும்.! என்ற உயரிய சிந்தனையுடன் இப்பரிசுகள் வழங்கப்படுகிறது.

அத்துடன் நம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்ப ஊக்குவிக்கும் விதமாகவும் இப்பரிசுகள் உள்ளன.

இப்பரிசினை அறிவித்தமைக்கு, தெய்வத்திரு. வள்ளியப்பன் அய்யா குடும்பத்தார்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். 

Thursday, 27 October 2011

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு



பள்ளி மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 543 உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 2,388 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும், 1,044 உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில், 60 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களின் பெயர், பெற்றோர் விபரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட சுய விபரங்களும், பள்ளியில் இவர்களின் மதிப்பெண்கள், ஒழுக்க நடவடிக்கை, விளையாட்டில் ஆர்வம் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கம்ப்யூட்டர் மயமாக்கி, மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே குறியீட்டு எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் சர்வரில், இந்த குறியீட்டு எண்ணில் அம்மாணவனின் சுய விபரம், வருகை பதிவேடு, விளையாட்டு, மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு வகுப்பறையிலும், "ஸ்வீப்பிங்' மிஷின் வைத்த பின், மாணவன் தனது வருகையை, "ஸ்மார்ட் கார்டு' மூலம், "ஸ்வீப்' செய்து பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளையும், விபரங்களையும் பெற முடியும்.மேலும், வேறு ஊர் அல்லது வேறு பள்ளிக்கு மாறும் மாணவர்கள், "டிசி' உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறாமலேயே, ஸ்மார்ட் கார்டு மூலம் படிப்பை தொடர முடியும். நம்நாட்டில் முன்னோடியாக, குஜராத்தில், ஸ்மார்ட் கார்டு திட்டம் வெற்றிகரமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை, தமிழகத்திலும் செயல்படுத்தி, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுயவிபரம் மற்றும் பள்ளி நடவடிக்கைகள் மட்டுமின்றி, ஆரோக்கியம் குறித்தும் இந்த ஸ்மார்ட் கார்டில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவனையும் மருத்துவ பரிசோதனை செய்து, அந்த விபரங்களும் சேர்க்கப்பட உள்ளது. இடை நிற்கும் மாணவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.முதல்கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது. இதன் செயல்பாடுகள் மற்றும் பயன்களை தொடர்ந்து, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கடந்த மாதம் நிபுணர் குழு ஒன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து, இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்துள்ளனர்.இன்னும் ஓரிரு வாரங்களில், இத்திட்டத்துக்கான துவக்க விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கல்வித்துறையில் நிலவும் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

News: Dinamalar

Sunday, 11 September 2011

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விபரம் அறிவிப்பு



சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சையால் பள்ளிகள் திறக்கவும், புத்தகங்கள் வழங்கவும் காலதாமதம் ஏற்பட்டது.
இதை ஈடுகட்டும் வகையில் அனைத்து பள்ளிகளிலும், செப்., முதல், ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தவேண்டும். அனைத்து வேலை நாட்களிலும் 40 நிமிடங்கள் கூடுதலாகவகுப்புகள் நடத்த வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் 10 நாட்கள் என்பது ஐந்துநாட்களாக குறைக்கப்படுகிறது. 2012 மார்ச் 22ல் துவங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கும். கல்வியாண்டின் கடைசி பணி நாள் ஏப்.18 க்கு பதில் ஏப்.28 ஆகும். இதன்மூலம் மாணவர்களுக்கு ஏற்பட்ட 32 நாள் இழப்பு ஈடுகட்டப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமலர் செய்தி

சிறப்பு வசதியுடன் இலவச மடிக்கணினி!



தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை(லேப்-டாப்) கிராமப்புற மாணவர்களும் தடையோ, தயக்கமோஇல்லாமல் பயன்படுத்தும் வகையில், அவற்றில் தமிழ் ஒருங்குறியும்(யுனிகோடு), இயங்குமுறையும் (ஆபரேட்டிங் சிஸ்டம்)கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2, கலை மற்றும் அறிவியல், பொறியியல், பல தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும்மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, இந்த நிதியாண்டில், 9.12 லட்சம் மடிக்கணினிகள் வாங்க, 912 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு,அதிகபட்ச பலன் கிடைப்பதற்காக, மடிக்கணினியில் ஏராளமான, அதிநவீன வசதிகள் இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து தாலுகாக்களிலும், மூன்று ஆண்டுகளுக்குஇலவச சேவை அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்தின் கிளை இருக்கவேண்டும்.


மடிக்கணினியில் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குமுறைகள் இருக்க வேண்டும். குறுந்தகடு பதிவி(டி.வி.டி., ரைட்டர்), நிழற்படக் கருவி (கேமரா), கம்பியில்லா (ஒயர்லஸ்) 2 ஜி ராம் மற்றும் 320 ஜிபிவன்தகடு (ஹார்டு டிஸ்க்) ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும்கிராமப்புற மாணவர்களால், இவற்றைச் சரியான முறையில் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில்இருந்து வருபவர்கள். இவர்களால், ஆங்கிலத்திலேயே இருக்கும் மடிக்கணினி இயங்குமுறைகளை,கையாள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், மேலே கண்ட பல்வேறுவசதிகளோடு, தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியில், தமிழ் ஒருங்குறியும், தமிழ்இயங்குமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விசைப்பலகையும் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கொண்டிருக்கும். தமிழ் எழுத்துக்கள், எழுத்துருக்கள்(பான்ட்), கணினிக்கு உத்தரவு கொடுக்கப் பயன்படும், &'டூல்ஸ்&', கருத்தரங்குகளில் பயன்படுத்தப்படும், &'பவர் பாயின்ட்&', கணக்கு வழக்குக்கு உதவும், &'ஸ்பிரட் ஷீட்&' உள்ளிட்டவையும் தமிழில் இருக்கும்படிவலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், தமிழ்நாடு, "வெர்ச்சுவல் அகடமி&' வசம் ஒப்படைக்கப்பட்டன.அவர்கள் இதற்கான மென்பொருளை வடிவமைத்து, தயாரிப்பாளர்களிடம் தந்துவிட்டனர். அவர்கள், அதைமடிக்கணினியோடு இணைத்து வழங்கியுள்ளனர்.இதனால், கிராமப்புற மாணவர்களும், ஆங்கிலத்தில்புலமை இல்லாதவர்களும், தமிழிலேயே கணினியை கையாள விரும்புபவர்களும், எந்த விதமானதயக்கமும், தடையுமின்றி, இலவச மடிக்கணினியைக் கையாளலாம்.
தினமலர்

Tuesday, 9 August 2011

இந்த ஆண்டே சமச்சீர் கல்வி !

மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று, இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் என்று சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டப்பேரவையில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்கப்பட்டதும், அவர், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் வகையில் சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவோம்" என்று அறிவித்தார். 


இதன் மூலம் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Sunday, 22 May 2011

பள்ளிகள் ஜூன் 15 ல் திறப்பு


மே 22 ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்,இதுதொடர்பான பிரச்னைக்கு சில சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள்திறப்பை தள்ளி வைக்கவும், அமைச்சரவை கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மே 22 அன்று அமைச்சரவைகூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அனைத்து துறை அமைச்சர்கள்,தலைமை செயலர், மற்றும் பல்வேறு துறை செயலர்கள்பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சமச்சீர் கல்வி பற்றி முக்கிய முடிவுஎடுக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சமச்சீர்கல்வி, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும்படியாக அமையவில்லை. தற்போதைய சமச்சீர்கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தையும் உயர்த்த வழி செய்யாது. எனவே சமச்சீர் கல்வி வேண்டும்என்றும், ஆனால் அதேநேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர்குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்படுகிறது.

நடப்பாண்டு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என்றும், இந்த கல்வி ஆண்டில் பழையபாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்றும், புதிதாக புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால்ஜூன் 1 ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை ஜூன் 15 ம் தேதி திறக்கலாம் என்றும்உத்தரவிடப்படுகிறது.

Friday, 20 May 2011

மாணவர்களுக்கு இலவச "லேப்-டாப்''

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்' வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, இந்த கணக்கெடுப்பு நடைபெறும். அதனடிப்படையில், வரும் டிசம்பருக்குள், 14 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக, "லேப்-டாப்' வழங்கப்பட உள்ளன.

சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், இலவசமாக, "லேப்-டாப்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ள நிலையில், "தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும், ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார். இதனால், துறை வாரியாக நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

மாண்புமிகு. தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்' வழங்கும் திட்டம் குறித்து, நேற்று முன்தினம், சென்னையில் நடந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விரிவாக ஆய்வு செய்தார். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அமலில் இருக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஜூன் முதல், ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களுக்கு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இது முடிந்தபின், மாவட்ட வாரியாக பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், மாணவியர் குறித்த விவரங்களை கணக்கெடுத்து அளிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் நிதிச் செலவுகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும், "லேப்-டாப்'கள் தரமான நிறுவனத்திடம் இருந்து வாங்குவது குறித்தும், ஆராயப்பட்டன. மேலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

கடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் எழுதினர். வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பில் ஏழரை லட்சம் மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான புள்ளி விவரம், ஆகஸ்ட் இறுதியில் தெரியவரும். எனினும், 14 லட்சம் பேருக்கு இலவச, "லேப்-டாப்'கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோல், உயர் கல்வித்துறை சார்பாகவும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்'கள் வழங்கப்பட உள்ளன.

- தினமலர் செய்தி

Thursday, 5 May 2011

சமச்சீர் கல்வி - 8, 9, 10ம் வகுப்பு புத்தகங்கள்


சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 8, 9-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.


மாணவர்களும், ஆசிரியர்களும் இந்தப் புத்தகங்களை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதாக மாணவர்களும், பெற்றோர்களும் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, பத்தாம் வகுப்பு புத்தகங்கள் இணையதளத்தில் ஏப்ரல் 21-ம் தேதி வெளியிடப்பட்டன.இந்தப் புத்தகங்களை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்க்கவும், பதிவிறக்கமும் செய்ததால் இணையதளம் முடங்கியது. 

இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு, இப்போது அனைவரும் பதிவிறக்கம் செய்யும் வகையில் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன.இந்த நிலையில், தனியார் பள்ளி நிர்வாகிகள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 8, 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்களும் பள்ளிக் கல்வித் துறையின் 


இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

"இந்தப் புத்தகங்களை இணையதளத்தில் பார்ப்பதில் சிறிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது புதன்கிழமை காலைக்குள் சரிசெய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, மாணவர்களும், ஆசிரியர்களும் புத்தகங்களைப் பார்வையிடலாம்; பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்' என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, 7 March 2011

60 சதவீத மதிப்பெண் போதும் எம்பிபிஎஸ் படிக்க.!



மருத்துவ படிப்பு என்பது பெரும்பாலான மாணவர்களின் கனவு. தமிழகத்தை பொறுத்தவரை  பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கவுன்சலிங்கில் சீட்களை ஆக்கிரமித்து விடுகிறார்கள். பல மாநிலங்களில் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண்களை கருத்தில் கொள்வதில்லை.

இந்த அடிப்படையில் உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவக்கல்லூரியில் 2011 - 12ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை அடிப்படையாக கொண்டு பிளஸ்2வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும் எம்பிபிஎஸ் படிக்க விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.

31.12.2011 தேதிப்படி குறைந்தபட்சம் 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். Pre Medical Entrance Examination (PMEE2011) என்ற நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 3- ம் தேதி காலை 10 மணி முதல்   12.30 மணி வரை அலகாபாத், டெல்லி, லக்னோ ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணமாக ரூ.1250ஐ HIHT University, SBIJolly Grand, Bank code No:10580, Dehradun என்ற பெயருக்கு டிடி எடுக்க வேண்டும். இந்த டிடியுடன் முழுவிவரம்   அடங்கிய கோரிக்கை கடிதத்தை இணைத்து வரும் மார்ச் 31-க்குள் HIHT University, Swami Ram Nagar (P.O), Doiwala, Dehradun248140' என்ற முகவரிக்கு  அனுப்பி   விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு வரும் ஏப்.6ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

நன்றி: தமிழ் முரசு

Friday, 31 December 2010

அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : இரண்டாம் ஆண்டில் நமது பள்ளி வலைத்தளம் !


வணக்கம்.



விளையாட்டாக ஆரம்பித்து இன்று ஓராண்டு முடியும் தருவாயில் உள்ளது, நமது பள்ளி வலைத்தளம் ! இத்துடன் மொத்தம் 45 பதிவுகள் போடப்பட்டுள்ளன. இப்பதிவுகள் சிலருக்காவது பயன் தரும் வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

தளத்தின் பதிவுகள் சில பிரபல தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திகளில் இருந்து எடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டது, என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பள்ளி சார்ந்த பதிவுகள், நிழற்படங்கள் அனைத்தும் பள்ளி சார்பாக எடுக்கப்பட்டவையே ஆகும்.

நமது தளத்தில் பின்னூட்டங்கள் இட்ட நண்பர்கள், தமிழ் இண்ட்லியில் வாக்கு அளித்தவர்கள் மேலும் மின்னஞ்சல் மூலம் பாராட்டு தெரிவித்தவர்கள் என அனைவருக்கும் நன்றிகள்..


இனிப்பான செய்தி: நமது பள்ளி வலைத்தளத்தை, பிளாக்கரில் இருந்து மாற்றி தனி வலைத்தளமாக (டொமைன்) மாற்ற விழைகிறேன். விரைவில் எதிர்பாருங்கள்..! (தை பிறந்தால் வழி பிறக்கும்)


www.arimalamschool.com
www.arimalamghss.com
www.arimalampalli.com
www.ghssarimalam.com


நீங்கள் இதில் ஒரு முகவரியை தேர்வுசெய்து, பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.. அல்லது சைடு பாரில் ஓட்டு போடவும்.


வேண்டுகோள்:  இந்த தளத்தில் அரிமளம் பள்ளியின் ஆசிரியர்கள், இந்நாள் & முன்னாள் மாணவர்கள் மற்றும் விருப்பம் உள்ள நண்பர்கள் என அனைவரும் பங்களிக்கலாம். தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

- அன்புராஜா 

Saturday, 11 December 2010

தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம்!


தமிழ் வழியில் படித்தால், அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிப்பதற்கு வழிவகை செய்யும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 


கோவையில் கடந்த ஜூன் மாதம் நடந்த, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முதல்வர் கருணாநிதி பேசும்போது, ‘தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.


தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கத்தில், இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இது தொடர்பாக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அரசு வேலை வாய்ப்புகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசாணையை பிறப்பித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். அரசுத்துறைகள், மாநில சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகள், அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கார்ப்பரேஷன் மற்றும் நிறுவனங்களில் மொத்த காலிப் பணியிடங்களில், 20 சதவீதம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இனிமேல் அரசுத் துறைகளில் பணி நியமனங்கள் நடந்தால், மொத்த பணியிடங்களில் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும். இதனால், தமிழ் வழியில் படித்த பலருக்கும், அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பல்வேறு படிப்புகளை தமிழ் வழியில் தான் படிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு வேலை வாய்ப்பில், அதிக பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று, அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, 6 October 2010

‘ஒவ்வொரு கல்லூரியும் ஒரு பள்ளியை தத்தெடுக்க திட்டம்’

“சென்னைப் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள 152 கல்லூரிகளும், ஒவ்வொரு பள்ளியை தத்தெடுக்கும் திட்டம் அடுத்த மாதம் துவக்கப்படும்,” என துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.



சென்னைப் பல்கலைக் கழக பூகோளவியல் துறை சார்பில், உலக இருப்பிட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், ‘வெளிப்படையான சென்னை’ ( http://www.transparentchennai.com/ )இணையதளத்தை துணைவேந்தர் திருவாசகம் துவக்கி வைத்தார். ‘தரமிகு தாம்பரம்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.


நிகழ்ச்சியில் துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:  

சென்னைப் பல்கலையின் கட்டுப்பாட்டில், 152 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் ஒவ்வொரு பள்ளியை தத்தெடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். முன்னணி தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் இல்லாத அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் இத்திட்டத்தின்படி தத்தெடுக்கப்படும்.

தத்தெடுக்கப்பட்ட பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தத்தெடுத்த கல்லூரியில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர். இதனால், கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகம், நூலகம், மொழி ஆய்வகம், மென்திறன் பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி, விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட வசதிகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் மாலை 5 மணிக்கு மேல் கல்லூரிகளின் வசதிகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். ஆசிரியர் மேம்பாட்டிற்காக, பள்ளி ஆசிரியர்களுக்கு கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவர். இத்திட்டத்தை அடுத்த மாத மத்தியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பார். இவ்வாறு திருவாசகம் பேசினார்.

தமிழக நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னையில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரி மைக் நிதவ்ரியானகிஸ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பெல்லியப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். துறைத் தலைவர் ஜெகநாதன் வரவேற்றார்.

சென்னைப் பல்கலைக் கழக பதிப்பகத்துறை வெளியீடுகளை உள்ளடக்கிய புத்தகக் கண்காட்சியை, அமைச்சர் பரிதி இளம்வழுதி திறந்து வைத்தார். வரும் நவம்பர் 3ம் தேதி வரை நடக்கவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் வாங்கப்படும் புத்தகங்கள், 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன.


.

Friday, 18 June 2010

அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : 2010-11 ஆண்டு மாணவர் சேர்க்கை

தேதி: 02.06.2010

2010-11 ம் ஆண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதியுடைய அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பூர்த்தி செய்து மாணவர்கள் விரைவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பின்னர் தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும்.

இந்த ஆண்டு சேர்க்கை 6 முதல் 12 வகுப்பு வரை அனைத்து வழி பாடப்பிரிவுகளுக்கும் நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால் விருப்பப்படும் அனைத்து மாணவர்களும் விரைந்து சேர அறிவுறுத்தப்படுகிறார்கள். 


திரு.பொன்.பழனியப்பன்
தலைமையாசிரியர் (பொ)

Sunday, 7 February 2010

தமிழ் இணைய மாநாடு - Tamil Internet Conference

9வது தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

  • கட்டுரைச் சுருக்கம் அனுப்பவேண்டிய இறுதி நாள்: 25 பிப்ரவரி 2010. 
  • ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: ti2010-cpc@infitt.org

Friday, 8 January 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வணக்கம்

புத்தாண்டில் ஒரு புதுமுயற்சியாக உருவாக்கப்பட்டதே நம் அரிமளம் மேல்நிலைப்பள்ளிக்கான வலைத்தளம். இத்தளத்தில் அரிமளம் பள்ளியின் ஆசிரியர்கள், இந்நாள் & முன்னாள் மாணவர்கள் மற்றும் விருப்பம் உள்ள நண்பர்கள் என அனைவரும் பங்களிக்கலாம். இந்த பரந்து விரிந்த இணைய உலகில் நமக்காக நாம் உருவாக்கிய ஒரு இடம் இது. மேலும் இத்தளத்தில் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புகள் ஆகியவை இடம்பெறும்.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...


அ.மே.நி பள்ளி, அரிமளம்

-

-