Friday 20 May 2011

பொறியியல் படித்தால் வேலை உறுதியா?

திக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களும், பல லட்சம் வரை நன்கொடை கொடுக்கும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் மட்டுமே பொறியியல் படிப்பில் சேரும் வாய்ப்பை, கடந்த காலங்களில் பெற்று வந்தனர்.
கடந்த ஆட்சியில், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன.

ஓ.சி., பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதம் 60ல் இருந்து, 50ஆகவும், பி.சி., பிரிவினருக்கு 50ல் இருந்து, 45ஆகவும், எம்.பி.சி., பிரிவினருக்கு 45 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என அறிவிக்கப்பட்டது. இதனால், மாடி வீட்டு மாணவர்கள் முதல், குடிசை வீட்டு மாணவர்கள் வரை அனைவரும், உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும், வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஏராளமான மாணவர்கள், பொறியியல் படித்து வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பலரும், பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். போட்டி போட்டுக் கொண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தாலும், இந்த படிப்பை படிக்கும் அனைவரும், நல்ல வேலை வாய்ப்பை பெறுகிறார்களா என்றால் இல்லை! அதிக, கட்-ஆப் மதிப்பெண்கள் எடுத்து, முன்னணி கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்கள் மட்டுமே, அரியர்ஸ் வைக்காமல் நன்றாக படித்து, வேலை வாய்ப்பை பெறுகின்றனர். ஆனால், சுமாரான கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும், சரியாக படிக்காத மாணவர்களுக்கும் எதிர்பார்க்கும் வேலைகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில், வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக, கடந்த 16ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர். மாணவர்களை பிடிப்பதற்கு, ஒவ்வொரு கல்லூரியும் வலை வீசி வருகின்றன.


அண்ணா பல்கலையில் உள்ள வேலை வாய்ப்புத்துறை இயக்குனர் செல்வம், பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கூறியதாவது: பொறியியல் படிப்பில் சேர்வதால் மட்டுமே, ஏதோ சாதித்து விட்டதாக அர்த்தம் கிடையாது. மூன்று தகுதிகளைக் கொண்ட மாணவர்களால் மட்டுமே, இந்த துறையில் சாதிக்க முடியும். ஒன்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது, அதிகபட்ச, கட்-ஆப் மதிப்பெண் பெற வேண்டும். மூன்றாவது, எட்டு செமஸ்டர் தேர்வுகளிலும், சிறப்பான நிலையில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த மூன்று தகுதிகளுடன், எதையும் வித்தியாசமாக திட்டமிட்டு, அதை செயல்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக மாணவர்கள் விளங்க வேண்டும்.


இந்த தகுதிகளைக் கொண்ட மாணவர்களால் மட்டுமே, இத்துறையில் சாதிக்க முடியும். அதிகபட்ச சம்பளத்தில், நல்ல வேலை வாய்ப்புகளும் தானாக தேடி வரும். இந்த தகுதிகளில் ஒன்று குறைந்தாலும், நல்ல வேலை வாய்ப்புகளை கண்டிப்பாக பெற முடியாது. அண்ணா பல்கலையில் சேரும் மாணவர்கள் அனைவரும், நல்ல வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர்.

எந்த பிரிவை தேர்வு செய்தால் வேலை கிடைக்கும் என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லாதது. மாணவர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கு பிடித்த பிரிவுகளை தேர்வு செய்து, அதில் சிறப்பாக படித்தால், வேலை வாய்ப்பு கண்டிப்பாக உறுதி. இந்த மூன்று தகுதிகள் இல்லாமல், ஏதோ பொறியியல் படிப்பில் சேர வேண்டும் என்று சேர்ந்தால், எதையும் சாதிக்க முடியாது. இவ்வாறு இயக்குனர் செல்வம் கூறினார்.

No comments :

-

-