Saturday, 2 November 2013

தீபாவளி திருநாள்


தீபாவளி தமிழர் திருநாள்தானா என்று கேட்டால், நாயக்கர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னால் நமது தமிழ் இலக்கியங்களில் "தீபாவளி' என்கிற பண்டிகையைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக தமிழர்தம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட பண்டிகையாக "தீபாவளி' மாறிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பண்டிகை தேவைதானா என்பது தேவையற்ற விவாதம்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காலூன்றிய ஆங்கிலேயர்களின் புத்தாண்டுப் பிறப்பை நாம் ஏற்றுக்கொண்டு, கொண்டாடத் தயங்காதபோது, ஆறு நூற்றாண்டுகளாக நமது கலாசாரத்தில் கலந்துவிட்ட பண்டிகையைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? காதலர் தினம் கொண்டாடுவதைவிட, தீபாவளி கொண்டாடுவது எந்தவிதத்தில் தேவையற்றதாகிவிட்டது?
பணக்காரர்களுக்குத் தங்கள் வசதி வாய்ப்புகளை வெளிச்சம்போட இதுபோன்ற பண்டிகைகள் உதவுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல, ஏழைகளுக்கும் மத்தியதர வகுப்பினருக்கும் நாளும் உழைத்து ஓடாய்த் தேயும் விவசாயி, கூலித் தொழிலாளி போன்ற பாட்டாளி வர்க்கத்தினருக்கும் தீபாவளி பண்டிகை தங்களது குடும்பத்தினருடன் குதூகலமாக இருக்க அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு. பலருக்கும் புத்தாடை வாங்கவோ, பெறவோ தீபாவளி காரணமாகின்றது என்பதுதான் உண்மை.
தீபாவளித் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மியான்மர் (பர்மா), மொரீஷியஸ், கயானா, சுரிநாம், மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி போன்ற இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் நாடுகளில் எல்லாம் அரசு விடுமுறை நாளாக இருப்பதிலிருந்தே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் எத்தகையது என்பது தெரிகிறது.
நாமெல்லாம் தீபாவளி என்பது நரகாசுரனைக் கிருஷ்ணனும் சத்தியபாமாவும் வதைத்ததைக் கொண்டாடும் பண்டிகை என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தீபாவளிக்கு இன்னொரு புராணப் பின்னணியும் உண்டு. தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்துக்கொண்டு ராமபிரான் சீதாப்பிராட்டியுடன் அயோத்திக்குத் திரும்பிய நாள் தீபாவளி என்று கூறப்படுகிறது. இராவணனை அழித்துவிட்டு நாடு திரும்பும் ராமபிரானை, வழிநெடுக விளக்குகளை ஏற்றி வைத்து வாணவேடிக்கை முழங்க அயோத்தி நகர மக்கள் வரவேற்பதைக் குறிக்கும் நாளாக தீபாவளி அறியப்படுகிறது.
பௌத்த மதத்தினருக்கு புத்த பூர்ணிமாபோல, ஜைனர்களுக்கு அவர்களது கடைசித் தீர்த்தங்கரரான மகாவீரர், ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன் நிர்வாணம் அல்லது முக்தி அடைந்த நாள்தான் தீபாவளி!
அதேபோல, சீக்கியர்களுக்கும் தீபாவளி ஒரு பண்டிகை நாள்தான். முகலாய மன்னர்களால் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த், தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 இந்து அரசர்களுடன் சிறையிலிருந்து தப்பி வந்த தினமாக சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். சிறையிலிருந்து தப்பி வந்த குரு ஹர்கோவிந்த் அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோவிலில் விளக்கை ஏற்றி மகிழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் எல்லா சீக்கிய குருத்வாராக்களும் தீபாவளி அன்று ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன. வாண வேடிக்கைகளும், விருந்துகளும் சீக்கியர்களுக்கும் உண்டு.
நாம் புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகளையும், பலகாரங்களையும் சுவைத்து மகிழும் வேளையில், ஒரு அன்பு வேண்டுகோள். ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியில்லாமல், மாற்று உடை இல்லாமல், தலையில் எண்ணெய் தடவக்கூட முடியாமல் எத்தனை எத்தனையோ பேர் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது; ஏக்கம் இருக்கிறது. தெருவோரமோ, ஓலைக்குடிசையோ... அங்கேயும் குழந்தைகள் இருக்கிறார்கள்.
வறுமை என்பது விதி என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அப்படிச் செய்வது சிறுமை. வறுமை கண்ட இடத்து நம்மால் இயன்ற உதவிகளை நல்குவதுதான் நமக்குப் பெருமை.
தீபாவளிப் பண்டிகையை சீரும் சிறப்புமாகக் கொண்டாடுங்கள். அதேநேரத்தில், ஏதாவது ஓர் ஏழைக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த ஓலைக் குடிசையிலும் குழந்தைகள் புத்தாடை உடுத்தி, வயிறார உண்டு, மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்து மகிழ்வதை உங்களது தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்குங்கள். அந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யுங்களேன்.
நலம் பெருகட்டும்! நாடு செழிக்கட்டும்! இல்லை என்பதே இல்லாத, இன்பமயமான உலகம் உருவாகட்டும்!
வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்..

தலையங்கம்: தினமணி 02/11/2013
Post a Comment

-

-