Monday 10 October 2011

மாணவர்களுக்கான குறைந்த விலை கணினி - Tablet கம்ப்யூட்டர்



இந்தியாவில் மாணவர்களுக்காக மிகக் குறைந்த விலையில் கம்ப்யூட்டரை மத்திய அமைச்சர் கபில் சிபல் அறிமுகம் செய்துள்ளார்.
இந்தியாவில் மாணவர்களுக்கு பாதி விலையில் கம்ப்யூட்டர்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 1 லட்சம் கம்ப்யூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் விற்கப்பட உள்ள இந்த கம்ப்யூட்டருக்கு ஆகாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல்,”இந்த கம்ப்யூட்டரின் விலை தற்போது ரூ.2,276 ஆகும். வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இதில் பாதி விலைக்கு விற்கப்படும். ஒரு கம்ப்யூட்டரின் விலை ரூ.500க்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த கம்ப்யூட்டர்கள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது” என்று கூறினார்.
வரும் நவம்பர் மாதம் முதல் இந்த கையடக்க கணினி வர்த்தக ரீதியிலும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டேட்டா வைண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் டேப்லெட் கம்ப்யூட்டர் முழுக்க முழுக்க பாடத்திட்டத்துக்கு உதவும் வகையில் இருக்கும்.
ஆனால், வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆகாஷ் டேப்லெட்டில் 3ஜி வசதியுடன் வருகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ 2.2 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த டேப்லெட் 7 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆகாஷ் டேப்லெட்டுக்கு ஏர்செல் நிறுவனம் சிம் கார்டுகளை வழங்க இருப்பதாக டேட்டா வைண்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வர்த்தக ரீதியில் இந்த டேப்லெட் ரூ.3,000 விலையில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் டேட்டா வைண்டு தெரிவித்துள்ளது.
தற்போது இந்திய மார்க்கெட்டில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான பீட்டெல் நிறுவனம் ரூ.9,999க்கு டேப்லெட் கம்ப்யூட்டரை விற்பனை செய்து வருகிறது. இதுவரை இந்த டேப்லெட் கம்ப்யூட்டரே இந்திய மார்க்கெட்டில் குறைந்த விலை டேப்லெட்டாக இருக்கிறது.
இந்த நிலையில், விரைவில் வர்த்தக ரீதியில் ஆகாஷ் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டால் மற்ற நிறுவனங்களின் டேப்லெட்டுகளுக்கு அது கடும் சவாலையும், போட்டியையும் ஏற்படுத்தும்.
Thanks: Kalvikalanjiyam

No comments :

-

-