Sunday 5 September 2010

ஆசிரியர் என்பவர்... பிரதமர் மன்மோகன் சிங்

இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தனர்.

அவர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: பள்ளிகளில் சில நேரங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றாலே அவர்களுக்கு பய உணர்வு உருவாகிறது.இந்த மோசமான நிலை மாற வேண்டும். மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பள்ளிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும்.

அனைவருக்கும் கல்வி கிடைப்பதை நாம் அடிப்படை உரிமையாக்கியுள்ளோம். இந்த சட்டத்தால் மட்டுமே அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்துவிட முடியாது. பள்ளியில் நல்ல சூழல் நிலவினால்தான் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள். அப்போதுதான் அனைவருக்கும் கல்வி என்ற நமது கனவும் நனவாகும். அனைவருக்கும் கல்வி அளிக்க உருவாக்கப்பட்ட தேசிய இயக்கமும் அதன் இலக்கை எட்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை என்றால் வகுப்பறையில் எப்படி ஒழுங்கை நிலைநாட்டுவது என்று சில ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இப்படி கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள் எல்லாம் மாணவர்களுக்கு ஒழுக்கம் புகட்டுவது குறித்து பிரபல தத்துவவியல் அறிஞர் ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னதை நினைத்துப் பார்க்க வேண்டும்."ஒழுக்கத்தைப் போதித்து ஒரு மாணவரை மிக எளிதாக கட்டுப்படுத்திவிடலாம்; ஆனால் நடைமுறை வாழ்வில் உள்ள பிரச்னைகளை அவர் அறியாதவரை இந்த ஒழுக்கப் போதனை பயன் தராது' என்ற அவரின் தத்துவத்தை அனைத்து ஆசிரியர்களும் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளித்து அவர்களை மிரட்டுவதற்குப் பதிலாக ஒவ்வொரு மாணவரின் மீதும் ஆசிரியர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது பிரச்னைகளை ஆராய்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்தாலே நல்ல ஒரு மாணவ சமுதாயத்தை நிச்சயம் உருவாக்கிவிட முடியும். இதுபோன்ற தருணத்தில் மாணவர்கள் மீது கடுமையான தண்டனையை திணிப்பது என்பதும் தேவையற்றதாகிவிடும். 

நமது கல்வி முறை இக்கட்டான சூழலில் உள்ளது. ஒருபுறம் பாரம்பரியத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். மறுபுறம் நவீனத்துக்கும், புதுமைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலை. இவ்விரண்டில் ஒன்றைக்கூட புறக்கணித்துவிட முடியாது.

நமது கல்வி முறையில் சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளதில் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆசிரியர்கள் நாட்டின் விலைமதிக்க முடியாத வளமாக உள்ளனர். ஆனால் கல்வி முறையில் கொள்கை முடிவை எடுப்பதிலும், நிர்வாகத்திலும் ஆசிரியர்களால் பங்கு பெற முடியாத நிலை உள்ளது. இது துரதிருஷ்டவசமானது.

நம் நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்குமே புதுமையை படைக்கும் வல்லமையும், திறமையும் உண்டு என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு உண்டு. இதனால் கல்வி முறையில் கொள்கை முடிவெடுப்பதிலும், நிர்வாகத்திலும் அவர்களும் பங்குபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதுவும் கல்வி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அமைவது அவசியம்.  

ஆசிரியர் பணி என்பது மரியாதைக்குரிய பணி. நானும் அடிப்படையில் ஓர் ஆசிரியர் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. ஆசிரியர் பணியில் நான் முழு திருப்தியுடன் ஈடுபட்டேன். அப்பணியும் எனக்கு முழு திருப்தியை அளித்தது என்றார் மன்மோகன் சிங்.

அனைவருக்கும் ஆசிரியர் தினவிழா வாழ்த்துக்கள்..
 

No comments :

-

-