Saturday 19 March 2011

மீடியா & திரைப்படத் துறை படிப்புகள்


பாடத்தில் உள்ளவற்றைப் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட, சுயமாக சிந்தித்து உருவாக்கிய ஓவியத்தாலோ, கலைப் பொருளாலோ அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்களா?
அப்படியானால் இது உங்களுக்கானதுதான். இரண்டாம் உலகப் போரில் நடந்த யுத்தத்தைப் பற்றி எழுதிபட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, ஒரு அலுவலகத்தில் போய் வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இல்லையா?

பென்சிலால் கட்டமும், சதுரமும் வரைந்து புதிய டிசைன்களை உருவாக்குவதிலும், கலைப் பொருட்களை வடிவமைப்பதிலும் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? அதையே முழு நேர வேலையாக செய்யும் எண்ணம் இருந்தால் நீங்கள் சேர வேண்டியது டிசைனிங் பாடப்பிரிவுகளில்.

இதில் என்ன எதிர்காலம் இருக்கிறது என்ற காலம் போய், இதில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் தற்போது டிசைனிங் கோர்ஸ் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.

பெங்களூருவில் உள்ள டிசைன் அண்ட் டெக்னாலஜி படிப்புகளை அளிக்கும் சிருஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட்டின் ப்ரொபஷனல் டிப்ளமோ ப்ரோக்ராம்ஸ் பிரிவின் டீன் அம்பட் வர்கீஸிடம் இது பற்றி கேட்டதற்கு, இந்தியாவில் டிசைனிங் துறையில் குறைந்தது 10,000 முதல் 20,000 வடிவமைப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெறும் 1,000 பேர்தான் இதுபோன்ற படிப்புகளில் சேருகின்றனர். இந்த துறையில் நல்ல எதிர்காலம் இருந்தும் இது பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே முக்கியக் காரணம் என்கிறார்.

அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் சின்ன சின்ன பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் வடிவமைப்பாளர் பயிற்சி அளிப்பதற்கான கல்வி நிலையங்கள் என்றால் அது வெறும் 8 தான் உள்ளன. தற்போது பல கல்வி நிலையங்களில் விஷ¤வல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.


விஸ்காம் என்றால் என்ன?

விஷ¤வல் கம்யூனிகேஷன் என்பதைத்தான் விஸ்காம் என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். விஷ¤வல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் மீடியா தொடர்பான அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. அதாவது எழுதுதல், தொகுப்பு, புகைப்படம் எடுத்தல், படம் எடுப்பது, அனிமேஷன், டிசைனிங் மற்றும் ஏனைய விஷயங்களும் கற்றுத்தரப்படுகிறது.

இளநிலை படிப்பில் இதுபோன்ற பாடப்பிரிவுகளை எடுத்து படித்த மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. மல்டி மீடியா, அனிமேஷன், விளம்பரத் துறை, புகைப்படம் எடுத்தல், திரைப்படம் எடுத்தல், தொலைக்காட்சி, கிராபிக் டிசைனிங் போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ஜனலிசம் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் கூட பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். செய்தி சேகரிப்பு, செய்தி தொகுப்பு, செய்தி வாசித்தல்,  பேட்டி எடுத்தல், சிறப்புச் செய்திகளை உருவாக்குதல் போன்றவற்றில் அவர்களது ஆர்வத்திற்கு ஏற்ப ஒரு பணியை தேர்வு செய்து கொள்ளலாம்.

விஸ்காம் படிக்கும் மாணவர்கள், படிப்பின் இறுதி மாதங்களில் செய்தி நிறுவனங்கள், வடிவமைப்பு கம்பெனிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் உதவித் தொகையுடன் கூடிய பணியை செய்கின்றனர். அவர்களது ஆர்வத்திற்கு ஏற்ப அவர்களது பணித் தேர்வு அமையும். இதனால் அவர்களுக்கு படிப்பின் போதே பணி அனுபவமும் கிடைத்துவிடுகிறது.

பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. விஷ¤வல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு, ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் அனந்தகிருஷன்னன் கூறுகையில், மீடியா தொடர்பான பல விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. வாக்கிய அமைப்பு, பில்ம் புரொடக்ஷன் போன்ற விஷயங்கள் தெரிந்து கொண்டதால் இந்த பணியை எளிதாக செய்ய முடிகிறது.

கல்வித் தகுதி மற்றும் சேர்க்கை

எப்போதும் காகிதங்களில் ஓவியங்களை வரைவதும், கம்ப்யூட்டரில் பெயின்ட்பிரஷ்ஷில் கிறுக்கிக் கொண்டிருப்பது மட்டும் இந்த பாடப்பிரிவுகளில் சேர தகுதியாகிவிடாது.

விஸ்காம் பாடப்பிரிவை அளிக்கும் பல கல்வி நிலையங்கள் இதற்கான கல்வித் தகுதியை வைத்துள்ளன. 10வது முடித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சில கல்லூரிகள் நுழைவுத் தேர்வினையும் நடத்துகின்றன. சிலவற்றில், வரைதல், புகைப்படம் எடுத்தல், எழுதுதல் அல்லது கிராபிக்ஸ் செய்தல் போன்ற தேர்வுகளும் நடத்தப்படுகிறது.

சில கல்லூரிகள் தங்கள் விஸ்காம் படிப்பில் சேர தனித்தனியாக நுழைவுத்  தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி அதன் பிறகே மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன.

வேலை வாய்ப்பு

இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தாலே பல வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கு மேலும் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பது அவரவர் விருப்பம். எழுத்து ஆற்றல், ஒரு சம்பவத்தை நன்கு விவரித்துக் கூறும் திறமை இருந்தால் ஜனலிசம் ஒரு நல்ல தேர்வாகும். செய்தியாளராக சேர்பவர்களுக்கு குறைந்தது 15,000 மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு உங்கள் திறமைக்கேற்ற ஊதியம் பெறலாம்.

திரைப்படத் துறையில் ஆர்வமிருப்பின், உதவி இயக்குநராக பணியாற்றலாம். அதன்பிறகு படிப்படியாக அந்த தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மூத்த இயக்குநர் மற்றும் படத்தை இயக்கும் அளவிற்கு வளரலாம். அதுமட்டுமல்லாமல், விளம்பரப் படங்கள் இயக்குதல், குறும்படங்கள் தயாரித்தல் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

ஏஜென்சிகளைத் துவக்கி பெரிய கம்பெனிகளுக்குத் தேவையானவற்றை உருவாக்கித் தருதல், தொலைக்காட்சி, இணையதளம், நாளிதழ்கள், வாரப்பத்திரிக்கைகள் போன்றவற்றிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அனிமேஷன் துறையில் நீங்கள் அதிக திறமை மிக்கவர்களாக இருப்பின், அனிமேஷன் படங்களை உருவாக்குவதில் ஈடுபடலாம். நல்ல ஊதியம் பெறக் கூடிய துறையாக இது உள்ளது.

சாதாரண கல்வி நிலையங்களில் விஸ்காம் படிக்கும் மாணவர்களை விட, வடிமைப்பிற்கு என தனித்துவம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு பெரும்பாலும் நிர்வாகங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.

இளநிலை பாடப்பிரிவை முடித்ததும் வேலை தேடாமல், மேற்கொண்டு உங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அதில் சிறப்பு தேர்ச்சி பெறுங்கள். இது உங்கள் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளமாக அமையும்.

கிரியேட்டிவ் துறையில் சிறந்த படிப்பினை அளிப்பதில் சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரி, உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி சென்னை, டெல்லியில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகம், கொச்சியில் உள்ள அம்ரிதா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ், பாரதியார் யூனிவர்சிட்டி, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை முன்னிலையில் உள்ளன.

No comments :

-

-