Tuesday 12 October 2010

படித்த பள்ளியில் கிடைக்கும் வரவேற்பு மறக்க முடியாதது !


டித்த பள்ளியில் கிடைக்கும் வரவேற்பு வாழ்க்கையில் மறக்க முடியாதது என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.  

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 175-வது ஆண்டு விழா திங்கள்கிழமை (11.10.2010) நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமையேற்று மு.க.ஸ்டாலின் பேசியது:  

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் சேர்வதற்காக நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் நான் தோல்வி அடைந்துவிட்டேன்.  எனது மூத்த சகோதரர்கள் மு.க.முத்து, மு.க. அழகிரி ஆகியோர் அந்தப் பள்ளியிலேயே படித்து வந்தனர். இதையடுத்து, என்னையும் அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்காக முரசொலி மாறன் முயற்சி மேற்கொண்டார்.  

அப்போதைய சென்னை மாநகர மேயருடைய பரிந்துரையின்பேரில் இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். பின்னாளில் பட்டம் பெற்று, பொதுவாழ்வுக்கு வந்து சென்னை மாநகரத்துக்கு நான் மேயராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.  

1835-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி இன்றுவரை எத்தனையோ பேரை உருவாக்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் ஆனந்த், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன், மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, ஜி.கே.வாசன் மற்றும் நான் உள்பட நிறைய பேர் இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தான்.  

அரசியலில் இருப்பதால் பல்வேறு இடங்களில் எங்களுக்குப் பாராட்டும், வரவேற்பும் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், படித்த பள்ளியிலே வரவேற்பு கிடைக்கும்போது அதைவிட மறக்க முடியாத நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை.  

உலகத் தரத்தில் கல்வி: தமிழகத்தில் கல்வித் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிற மாநிலங்களுடனும், உலக அளவிலும் போட்டி போடக்கூடிய அளவில் உள்ளது.  சமச்சீர் கல்வி, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன.  கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 84,938 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் ஸ்டாலின்.  

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்: மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல. தேசத்தின் எதிர்காலமும் வகுப்பறைகளில்தான் உருவாக்கப்படுகிறது. பள்ளிப் பருவம் மிக முக்கியமானது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். எனவே, பள்ளியில் பயிலும் காலத்தை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  

மத்திய அரசு கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசும் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாகச் செயல்பட்டு கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை செய்து வருகின்றன.  கல்வித் தரத்தை உயர்த்துவதில் தனியார் பள்ளிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்தப் பங்கை சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளி சிறப்பாகச் செய்து வருகிறது என்றார் ஜி.கே. வாசன்.  

நிகழ்ச்சியில், மில்லர் அரங்கம் என்ற புதிய கட்டடத்துக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழா மலரை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் வெளியிட்டார்.  சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளி முதல்வர் ஜி.ஜே.மனோகர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாசன், பள்ளியின் 175-வது ஆண்டு விழாக் குழுத் தலைவர் அருண் மேமன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

சீனியர்... ஜூனியர்...  

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளி விழாவுக்கு நானும், ஜி.கே.வாசனும் ஒன்றாக வந்தோம் என்றார் துணை முதல்வர் ஸ்டாலின்.  மேலும் மு.க.ஸ்டாலின் பேசியது: விழாவுக்கு வருவதற்காக நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது, மத்திய அமைச்சர் வாசன், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  சிறிதுநேரம் கழித்து அவரைத் தொடர்பு கொண்டபோது, ""பள்ளியில் எனக்கு நீங்கள் சீனியர், நான் ஜூனியர். நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். இருவரும் ஒன்றாக விழாவுக்குச் செல்லலாம்'' என்றார் வாசன்.  அதன்படியே, எனது வீட்டிலிருந்து இருவரும் ஒன்றாக இங்கே வந்தோம். 

அண்ணா மேம்பாலம் அருகில் வந்த போது, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிறுத்தத்தில் இருந்து பஸ்ஸில் ஸ்டெர்லிங் சாலை வந்ததும், அங்கிருந்து பள்ளிக்கு நடந்து வந்ததும் எனது நினைவுக்கு வந்தன. அதை வாசனுடன் பகிர்ந்துகொண்டேன்.  அவரும் பள்ளியில் படிக்கும் போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். பள்ளியில் ஒரு சில மாற்றங்கள் தெரிந்தாலும், பழமை வாய்ந்த கட்டடங்கள் அப்படியே உள்ளன என்றார் மு.க.ஸ்டாலின்.  

.

No comments :

-

-