Wednesday 6 October 2010

‘ஒவ்வொரு கல்லூரியும் ஒரு பள்ளியை தத்தெடுக்க திட்டம்’

“சென்னைப் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள 152 கல்லூரிகளும், ஒவ்வொரு பள்ளியை தத்தெடுக்கும் திட்டம் அடுத்த மாதம் துவக்கப்படும்,” என துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.



சென்னைப் பல்கலைக் கழக பூகோளவியல் துறை சார்பில், உலக இருப்பிட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், ‘வெளிப்படையான சென்னை’ ( http://www.transparentchennai.com/ )இணையதளத்தை துணைவேந்தர் திருவாசகம் துவக்கி வைத்தார். ‘தரமிகு தாம்பரம்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.


நிகழ்ச்சியில் துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:  

சென்னைப் பல்கலையின் கட்டுப்பாட்டில், 152 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் ஒவ்வொரு பள்ளியை தத்தெடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். முன்னணி தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் இல்லாத அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் இத்திட்டத்தின்படி தத்தெடுக்கப்படும்.

தத்தெடுக்கப்பட்ட பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தத்தெடுத்த கல்லூரியில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர். இதனால், கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகம், நூலகம், மொழி ஆய்வகம், மென்திறன் பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி, விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட வசதிகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் மாலை 5 மணிக்கு மேல் கல்லூரிகளின் வசதிகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். ஆசிரியர் மேம்பாட்டிற்காக, பள்ளி ஆசிரியர்களுக்கு கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவர். இத்திட்டத்தை அடுத்த மாத மத்தியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பார். இவ்வாறு திருவாசகம் பேசினார்.

தமிழக நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னையில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரி மைக் நிதவ்ரியானகிஸ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பெல்லியப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். துறைத் தலைவர் ஜெகநாதன் வரவேற்றார்.

சென்னைப் பல்கலைக் கழக பதிப்பகத்துறை வெளியீடுகளை உள்ளடக்கிய புத்தகக் கண்காட்சியை, அமைச்சர் பரிதி இளம்வழுதி திறந்து வைத்தார். வரும் நவம்பர் 3ம் தேதி வரை நடக்கவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் வாங்கப்படும் புத்தகங்கள், 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன.


.

No comments :

-

-