Monday 19 September 2011

ஹாஸ்டல் செல்லும் முன் கற்றுக்கொள்ள வேண்டியவை!



இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிப்புக்காக, ஹாஸ்டலில் தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக அவர்கள் மனதளவில் தயாராவது அவசியம். பள்ளிப்படிப்பு வரை, பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலேயே தங்கி படிப்பர்.
கல்லூரிக்கு செல்லும் போது ஹாஸ்டல் அல்லது நண்பர்களுடன் அறைகளில் தங்க வேண்டி இருக்கும். புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை முறைக்கு மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும். இதனால் மனதளவில் சிலர் பாதிக்கப்படுவர்.
இதை எதிர்கொள்ள முக்கியத் தேவை மன தைரியம். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டால், கல்லூரி வாழ்க்கை இனிமையானதாகிவிடும். இந்த புதிய கல்லூரி அனுபவம் புத்தக படிப்பை மட்டுமல்லாது, வாழ்க்கை படிப்பையும் அளிக்கும்.
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது, கல்லூரி வாழ்க்கையில் அனைவருக்கும் முக்கியமான அம்சம். வெளியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு இது இன்றியமையாதது. கல்லூரி வாழ்க்கையில் அமையும் நண்பர்களை வைத்தே, அவர்களின் வாழ்க்கையும் அமைகிறது.
அனைவருடனும் சகஜமாக பழகலாம். ஆனால் தீய பழக்கவழக்கங்கள், கெட்ட எண்ணங்கள் உடையவர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். சிறந்த நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகினால், வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனியே இருக்கும் எண்ணமும் வராது.
பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக் கூட, நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதனால்கல்லூரி வாழ்க்கையில் நண்பர்கள் தேர்வை வைத்தே வாழ்வை நிர்ணயிக்கலாம். இவ்வாறு கல்லூரி படிப்பு, சிறந்த நண்பர்கள், அவர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுதல் கல்லூரி நாட்களை மட்டுமல்லாது வாழ்வையே இனிமையாக்கும்.

No comments :

-

-