Thursday 30 September 2010

சாதனை புரிய வெறி முக்கியம்; பள்ளி அல்ல


கோவை அரசு கலைக் கல்லூரியும் கோவை மாநகராட்சியும் இணைந்து நடத்தும் உயர்கல்வி மன்றத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவியருக்கு இலவச வேலை மற்றும் வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி நடத்தப்பட்டது.

போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசியதாவது: பிளஸ் 2 படிப்பை முடித்த பின் தொழிற் கல்வி படிப்புகளில் சேர பல லட்ச ரூபாய்கள் செலவிட வேண்டியதுள்ளது. மாணவர்கள் திட்டமிட்டு நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றால் பெற்றோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை சேமித்து தரலாம். படிக்கும் வயதில் பாடங்களை மட்டுமே நேசிக்க வேண்டும்.  பாடங்களை விரும்பி படித்தால் கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெற முடியும். ஒவ்வொரு ஏழை பெற்றோரும் பெரிய கனவுகளுடன் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். கனவை நிறைவேற்ற வேண்டியது மாணவர்களின் பொறுப்பு. மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பதால் சாதிக்க முடியாது என கருதி விடக்கூடாது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். சாதிக்க வேண்டும் என்ற வெறிதான் முக்கியம்; படிக்கும் பள்ளி அல்ல. பாடங்களை புரிந்து, சிந்தித்து படித்தால் மட்டுமே நினைவில் நிற்கும். புரிந்து படிப்பது மட்டும் முக்கியமல்ல, படித்ததை மறந்து விடாமல் இருப்பதும் முக்கியம். படித்ததை மீண்டும் நினைவு படுத்தும் நிகழ்வுதான் தேர்வு. படிக்கும் பாடத்தில் ஆர்வம் இருந்தால் மறக்காது. இவ்வாறு, கமிஷனர் சைலேந்திரபாபு பேசினார்.

உயர்கல்வி மைய தலைவர் மற்றும் முதன்மை நிபுணர் கனகராஜ், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்து பேசினார். கோவை மருத்துவக் கல்லூரி மாணவர் சதீஷ் மருத்துவ உயர்படிப்புகளை குறித்தும், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் தேவராஜ் ஐ.ஐ.டி.,தேர்வுகள் குறித்தும், நேரு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் தீபிகா மென்திறன்கள் குறித்தும் விளக்கினார். பல்வேறு மாநகராட்சிப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாதம் இருமுறை இந்த இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

No comments :

-

-