Monday 9 August 2010

பொறியியல் படிப்பில் சேர மற்றொரு வாய்ப்பு


பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும், பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அண்ணா பல்கலையில் நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நேற்று (ஆக. 8ம் தேதி) உடன் முடிந்தது. அகடமிக் பிரிவின் இறுதிக்கட்ட கவுன்சிலிங் வரும் 12, 13ம் தேதிகளில் நடக்கிறது. இதில், 92க்கும் குறைவான ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதரியராஜ் கூறியதாவது: பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி, அதன் மூலம் தகுதி பெற்ற மாணவர்களுக்கும், இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கும் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டு, துணை பொறியியல் கவுன்சிலிங் நடக்க உள்ளது.

மாணவர்கள் 14, 16ம் தேதிகளில், அண்ணா பல்கலை தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்கள் சான்றிதழ்கள், டி.சி., ஜாதிச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், இவற்றின் ஜெராக்ஸ் பிரதிகள், ஒரு புகைப்படத்துடன் நேரில் வந்து, பொறியியல் கவுன்சிலங்கில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., - எஸ்.சி., (அ), எஸ்.டி., 250 ரூபாயும், இதர மாணவர்கள் 500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 13ம் தேதி கவுன்சிலிங்கின் முடிவில் மீதமுள்ள இடங்கள், இம்மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இவர்களுக்கான துணை கவுன்சிலிங் தேதி பின் அறிவிக்கப்படும். இவ்வாறு ரைமண்ட் உதரியராஜ் கூறினார்.

பொறியியல் கவுன்சிலிங்கில் மொத்தம் 469 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. நேற்றைய நிலவரப்படி 27 கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 120 கல்லூரிகளில் 95 முதல் 99 சதவீதமும், 106 கல்லூரிகளில் 90 முதல் 96, 100 கல்லூரிகளில் 80 முதல் 89 சதவீதம் வரையிலான இடங்கள் நிரம்பியுள்ளன.

மொத்தமுள்ள 469 கல்லூரிகளில், 353 கல்லூரிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களும், 116 கல்லூரிகளில் 80 சதவீதத்திற்கு குறைவான இடங்களும் நிரம்பியுள்ளன.

No comments :

-

-