Friday 5 March 2010

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வு: அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம்


 

சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகம் ஆவதையொட்டி, தமிழக அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 4,241 அரசு பள்ளிகளிலும் ஆய்வக வசதிகளை மேம்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்விக்கு (ஆர்.எம்.எஸ்.ஏ.,) 2010-2011ம் ஆண்டுக்கான செயல் திட்டம் மற்றும் பட்ஜெட் தயாரிப்பு பணிமனை, கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா நான்கு ஆசிரியர்கள் பங்கேற்றுள்ள இந்த உண்டு உறைவிட பணிமனை, ஏழு நாட்கள் நடைபெறுகிறது.

பணிமனையை பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) கார்மேகம் துவக்கி வைத்து பேசியதாவது: 

வரும் 2010-2011ம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதில், 10ம் வகுப்புக்கும் இனி செய்முறை தேர்வுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. 2011-2012ல் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை, இதற்கென ஒன்பதாம் வகுப்பு முதலே தயார்படுத்த வேண்டியது முக்கியம்.இதற்கு அறிவியல் பாடத்திட்டத்தின்படி, பள்ளிகளில் ஆய்வக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள 4,241 பள்ளிகளிலும் ஆய்வக வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மின்சாரம், போன், இன்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டியதும் கட்டாயம்.

தற்போது பள்ளிகளில் வாங்கப்படும் நாளிதழ்களை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வாட்ச்மேன் மட்டுமே படிக்கும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு எந்த வகையிலும் இவை பயன் அளிப்பதில்லை. மாணவர்களின் வாசிப்புத் திறனையும் அறிவுத் திறனையும் மேம்படுத்த, அனைத்து மாணவர்களுக்கும் நாளிதழ்கள் சென்றடைவது முக்கியம்.

அனைத்து பள்ளிகளின் புள்ளி விவரங்களையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளின் விவரங்களை மையமாகக் கொண்டு 32 மாவட்டங்களிலும், "பர்சனல் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.இவ்வாறு கார்மேகம் பேசினார். 

இந்த ஏழு நாள் பணிமனையில், புதிய பள்ளிகளின் தேவைகள், மேற்கொள்ள வேண்டிய மராமத்து பணிகள், ஆசிரியர்களின் பயிற்சி தேவைகள், கல்வித் தரத்தை உயர்த்தும் திட்டங்கள், படிப்பில் பின்தங்கியவர்கள், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, சிறப்புப் பயிற்சி அளித்தல் உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

இதன் அடிப்படையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு, 2010-2011ம் ஆண்டுக்கு தேவையான பட்ஜெட் மற்றும் செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது. இத்திட்டம், மாநில அரசின் வாயிலாக மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

No comments :

-

-